PartyHelp Logo
பூப்புனித நீராட்டு விழா
Zurück zum Blog

பூப்புனித நீராட்டு விழா

சாமர்த்தியச் சடங்கு

சடங்கு செய்வதற்குச் சுபநாள் ஒன்றைத் தெரிவுசெய்து அன்று பருவடைந்த பெண்ணின் இரண்டு கைகளிலும் பாக்கும் சில்லறைக் காசும் வைத்துச் சுருட்டப் பெற்ற ஒரு வெற்றிலையைக் கொடுத்து, தலையில் வெள்ளைத் துணியால் முகத்திரை இட்டு (அபசகுனங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு) மாமியார் பால் அறுகு வைக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பார்க்ககூடியதாக பாயின் மேலோ அல்லது ஒரு வெள்ளைத்துண்டை இட்டு அதன் மேலோ பருவமடைந்த பெண்ணை உட்கார வைப்பர்.

அவளின் முன் நிறைகுடம், குத்து விளக்குகள், ஒரு பாத்திரத்தில் பால், அறுகம் புல், சில்லைறைக் காசு முதலியனவும், வேறு ஒரு தட்டில் பழம், பாக்கு வெற்றிலையும், ஒரு தேங்காயுடன் உடைப்பதற்கு கத்தியும் பாத்திரமும் வைப்பர். இச்சடங்கில் தாய்மாமன், மாமிக்குத்தான் முக்கிய இடம் அளிக்கப்படும். பெண்ணை நிறைகுடம் விளக்கில் பார்க்கும்படி பெண்ணுக்குக் கூறி முகத்திரையை விலக்கி விட்டு அதன் பின் கற்பூரம் ஏற்றி பிள்ளையாரைத் துதித்து எடுத்த காரியம் இனிதே நடைபெற வேண்டும் என்று நினைத்து வணங்க வேண்டும். தாய்மாமன் தேங்காய் உடைப்பார். பின் பால், அறுகு இருக்கும் தட்டில் சில்லறைக்காசு போட்டு மாமியார் இருகைகளாலும் எடுத்து பெண்ணை ஆசீர்வதித்து தலையில் வைப்பார்கள் அதைத் தொடர்ந்து 5 பேர் அல்லது 7 பேர் என ஒற்றை எண்ணிக்கையாலனவர்கள் பாலறுகு வைப்பர். பாலறகு வைத்து முடிந்ததும் பெண்ணை நீராட்டும் இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் கிழக்கு அல்லது வடக்கு முகமாகப் பெண்ணை இருத்தி முதலில் தாய்மாமன் தலையிலே தண்ணீரை ஊற்றுவார். அதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் ஊற்றுவார்கள். பெண்ணுக்கு மஞ்சள் பூசி நன்கு நீராட்டி மீண்டும் தலையைத் துணிகொண்டு மூடி அழைத்து வந்து சுடர்விட்டு பிரகாசிக்கும் குத்துவிளக்கை தரிசிக்க விடுவர். பின்பு பெண்ணை அலங்காரம் செய்து தாய்மாமன் பெண்ணின் கையில் கும்பம் (தேங்காய் மற்றும் மாவிலைக் கொத்தினால் மூடப்பெற்ற நிறைகுடம் அல்லது செம்பு) கொடுப்பார். கன்னிப் பெண்கள் குத்துவிளக்குடன் பெண்ணை அழைத்துக் கொண்டு மேடையை நோக்கிச் செல்வர். அங்கு ஆரத்தி தட்டங்கள் வரிசையாக வைப்பார்கள்.

பின்னர் சுமங்கலிப் பெண்கள் இருவர் எதிரெதிரே நின்றுகொண்டு ஒவ்வொரு தட்டங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று முறை வலது தோளால் உயர்த்தி ஆரத்தி எடுத்து பின் தலையை மூன்று முறை சுற்றி அதைப் பின்னுக்கு கொடுத்து கண்ணூறு கழிப்பார்கள். பின்பு கடைசியாக வேப்பிலையால் சுற்றித் தடவி பால் ரொட்டியை உடைத்து நாலுபக்கமும் எறித்து வேப்பிலையால் தலையைச் சுற்றிப் பெண்ணை வாயில் மென்று துப்பச் செய்தபின்னர், வாழைப்பழ ஆரத்தி எடுப்பர். (ஆரத்திக்குரிய தட்டங்களின் ஒழுங்கு இடத்துக்கிடம் வேறுபடலாம், ஆனால் எப்பவும் நிறைநாழி முதலாவதாகவும் வேப்பிலை வெள்ரொட்டித்தட்டம் இறுதியாகவும் செய்யவேண்டும். அதன் பின் வாழைப்பழம் ஆரத்தி எடுத்து நிறைவு செய்தல் வேண்டும். (பொதுவாகப் பெண்ணின் தாயார் ஆராத்தி எடுப்பதில்லை).

பெற்றோர் ஆண்டாள் மாலையை பெண்ணின் கழுத்தில் இட (ஆண்டாள் மாலை அணிவது பெண்ணைப் பாவையாக கருதுவதால்) பெண்ணின் முன் இருக்கும் நிறைகுடத்தைத் தாய்மாமனும், குத்துவிளக்கை மாமியாரும் எடுத்துக்கொண்டு அதனுடன் பெண்ணையும் அழைத்துக்கொண்டு பூசை அறையினுள் சென்று வைப்பர், தாய்மாமன் பெண்ணின் கையிலிருக்கும் செம்பை வாங்கி பூஜை அறையில் வைப்பர் (இம்முறை வீட்டில் செய்வோருக்குப் பொருந்தும்) பூஜை அறையில் தூப தீபம் காட்டி வழிபட்டு பெண் பெற்றோரினதும், மாமன் மாமியினதும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவாள். பின்பு சடங்கில் பங்குபற்றிய உறவினர்கள் பெண்ணை வாழ்த்தி தம்மால் இயன்றவரை பரிசளிப்பர். அதன் பின் வந்தவர்கள் மதிய உணவு விருந்தளித்து உபசரிப்பர்.

ஆரத்தி எடுக்கும் முறை

ஆரத்தி 3 முறை மேலும் கீழுமாக சுற்றிப் பின் பெண்ணின் தலைக்கு மேல் 3 முறை சுற்றிப் பின்னால் கொடுப்பர். (நிறை நாழியும் பன்னீர்த்தட்டமும் முன்னுக்கு வைக்கவேண்டும். உணவுத் தட்டங்களைத் தலைக்கு மேல் சுற்றிப் பின்னால் கொடுப்பர். பூத்தட்டத்தால் ஆரத்தி எடுத்தபின் பூக்களைப் பெண்மேல் தூவிவிடுதல் வேண்டும். பின் இந்த உணவுப் பண்டங்களை எல்லாம் கட்டிக் கட்டாடியிடம் கொடுத்து விடப்படும். அல்லது ஆற்றிலோ, கடலிலோ சேர்த்து விடப்படும்.

பால்சாதம்: பச்சை அரிக்குள் தேங்காய்ப் பாலும், நீரும் சிறிது உப்பும் போட்டு சாதமாக அவித்து 3 தளிசுகளாகத் தட்டில் வைக்கலாம்.

பிட்டு : வழமை போல் வறுத்த உழுத்தமா அரிசிமா கலந்து செய்த பிட்டை நீற்றுப் பெட்டியில் மும்முறை அவித்து தட்டத்தில் வைக்கப்படும்..

களி: வறுத்த அரிசிமா 1 சுண்டு, வறுத்த உழுத்தமா ½ சுண்டு, தேங்காய்பால் 3 சுண்டு, பனங்கட்டி ¾ சுண்டு உப்பு விரற்பிடியளவு, தேங்காய்ப் பாலைக் காய்ச்சி (உழுத்தமா, அரிசிமா, உப்பு, தூளாக்கிய பனங்கட்டி எல்லாவற்றையும் கலந்து பாலின் மேல் தூவி கட்டிபடாமல் கிளறி எடுத்து 3 தளிசுகளாக தட்டத்தில் வைப்பர்.

வெள்ரொட்டி (பால்ரொட்டி)

1 சுண்டு பச்சை அரியை கழுவி ஊற வைத்து இடித்து ¼ சுண்டு கப்பிமா எடுப்பர். மிகுதியை மாவக்குவர் இரண்டையும் கலந்து ½ தேக்கரண்டி உப்பும்சேர்ப்பர். ஒரு தேங்காய் துருவி முதல் பால் எடுத்து காய்ச்சி மாவில் ஊற்றி இறுக்கமாக கையில் ஒட்டாத பதத்திற்கு குழைப்பர். ½ மணித்தியாலம் விட்டு ஒரு வாழையிலையில் எண்ணெய் தடவி மாவை சிறு உருண்டைகளாகத் தட்டி எண்ணெயில் பொரிப்பர். இது பூரி போல் பொங்கி வரும்.

ஆரத்திப் பொருட்கள்

நிறை நாழி (நிறை நாழி கொத்தில் நெல்லை அதில் காம்பு சத்தகத்தை நிற்க வைத்து துனிக்காம்பில் ஒரு வெற்றிலையைச் சொருகி வைப்பர்.)

பிட்டி, களி, பால்சாதம், சோறுகறி. தேங்காய்த் தட்டம் (முடியுடன் கூடிய 3 தேங்காய்களை மஞ்சள் நீர் கொண்டு கழுவித் தட்டில் வைப்பர்),

  • பழங்கள்
  • பலகாரம்
  • பன்னீர்த்தட்டம்
  • வெற்றிலை பாக்கு எலுமிச்சை,
  • பூத்தட்டு,
  • வெள்ரொட்டி,
  • வேப்பிலை,
  • ஆரத்தி
P

Geschrieben von

PartyHelp Redaktion

Planen Sie eine Party?

Finden Sie die besten Services, Anbieter und Inspirationen für Ihr nächstes Event in der Schweiz.

Services entdecken